Monday, 30 June 2014

மய்யித் செருப்பின் ஓசையை கூட கேட்கும்

'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள் தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் தொடராக நாம் பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றிற்கான பதில்களையும் நோக்குவோம்.





வழிகேடர்களின் ஆதாரம்:
'ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து 'முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை, (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை' என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான். அறிவிப்பவர் அனஸ்(ரழி), நூல்: புஹாரீ 1338,1374

இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்: இறந்தவர்கள் 'செருப்பின் ஓசையை கேட்பதாக' இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. ஆதலால் இறந்தவர்கள் எதையும் கேட்பார்கள் என்று நம்ப வேண்டும்.

எமது பதில்: ஹதீஸ்களை எப்படி புரிய வேண்டும் என்ற அடிப்படை ஞானமில்லாததின் வெளிப்பாடாகத்தான் இவர்களுக்கு இந்த ஹதீஸை பிழையாக புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இறந்தவர்கள் கேட்கமாட்டார்கள்' என்பதற்கு எமது முதலாவது இதழில் ஏகப்பட்ட ஆதாரங்களை வழங்கினோம். அவற்றிற்கு முரண்படாத விதத்தில்தான் இந்த ஆதாரத்தையும் நாம் புரிதல் வேண்டும் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் ஞாபகமூட்டிக் கொள்கிறோம். 'செருப்பின் ஓசையை இறந்தவர் செவியுறுகிறார்' என்று மட்டும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தால் இவர்களது வாதம் ஓரளவு நியாயமெனலாம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் இவ்வாறு கூறுகிறார்கள்
'ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும்' நாம் அடிக்கோடிட்டுக் காட்டிய இடத்தின் வாசகத்தை நன்கு கவனியுங்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற வார்த்தையை இங்கு நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த வார்த்தையிலிருந்து நாம் புரியும் அம்சம் என்ன? அடக்கம் செய்து விட்டு திரும்பும் போது இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து 'இதல்லாத ஏனைய நேரங்களில் இறந்தவர்கள் எதையும் செவியுறமாட்டார்கள்' என்று நாம் புரியலாம்.
எனவே தோழர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது மாத்திரம் அவர்களின் செருப்பின் ஓசையை இறந்தவருக்கு இறைவன் கேட்க வைக்கிறான் என்பதே இந்த ஹதீஸிற்கான சரியான விளக்கமாகும். இந்த விளக்கத்தை சரிவரப் புரியாததினால்தான் அத்வைதிகளும் ஏனைய வழிகேடர்களும் இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காண்பித்து வருகின்றனர்.

ஹதீஸின் பின் வாசகம் தரும் கருத்து என்ன?
நாம் கூறுவது இறந்தவர்களுக்கு கேட்கும் என்றால் அவர்களுக்கு அங்கு நடப்பதும் எமக்குக் கேட்க வேண்டும். ஆனால் எம்மால் கேட்க முடியாது. காரணம் எமக்கும் அவர்களுக்குமிடையே பாரிய திரை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது. செருப்பின் ஓசையை கேட்பது மாத்திரம் விதிவிலக்கானது ஆகும். எனவேதான் இந்த ஹதீஸின் இறுதிப்பகுதியில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்,ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்'
'மனிதர்களும் ஜின்களும் கேட்கமாட்டார்கள்' என்று தெளிவாக நபி(ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தும் 'இறந்தவர்களை உம்மால் கேட்க வைக்க முடியாது' என அல்லாஹ் அல்குர்ஆனின் 27:80 வது வசனத்தில் கூறுவதிலிருந்தும் 'நாம் பேசுவதை இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு மண்ணறைகளில் நடப்பது எமக்கு தெரியாது. ஆனால் செருப்பின் ஓசையை மாத்திரம் அவர்கள் கேட்பார்கள். அதுவும் திரும்பிச் செல்கின்ற நேரத்தில் மாத்திரமே அந்த ஓசையை இறந்தவர்களுக்கு இறைவன் கேட்கச் செய்கிறான்.' என்றுதான் இந்த ஆதாரத்தை நாம் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்குவதுதான் ஏற்புடையதாகும். இதற்கு மாற்றமாக இறந்தவர்கள் செவியுறுவார்கள் என பொதுவாக இந்த ஆதாரத்தை நாம் விளங்கினால் அல்குர்ஆனில் இடம் பெற்ற 27:80 வது வசனத்தை மறுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை இந்த வழிகேடர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் ஆதாரங்களின் அர்த்தங்களை அனர்த்தமாக்கும் காரியங்களை செய்வோரின் உண்மை முகங்களை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வழிகேடர்களின் ஆதாரம்:
நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் தங்களது மண்ணறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்னத் அபீ யஃலா 3425

இதுவும் பொருத்தமற்ற ஆதாரமாகும். நபிமார்கள் மண்ணறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இறந்தவர்கள் கேட்பார்கள் என வாதிடுவது முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகும். ஒரு வாதத்திற்கு இவர்களின் கருத்து உண்மையென வைத்துக் கொண்டாலும் நபிமார்கள் மாத்திரம் செவியுறுவார்கள் என்றுதான் வாதிட வேண்டும். இவர்கள் அவ்லியா என அடையாளப்படுத்துபவர்களெல்லாம் கேட்பார்கள் என வாதிடுவது மற்றுமொரு முட்டாள்தனமாகும்.


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.