Sunday 15 June 2014

யார் இந்த வஹாபி?

20ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தஃவாப் பணியே என்ற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை. இவரைத் தொடர்ந்தே ஏனைய சீர்திருத்தவாதிகள் தோற்றம் பெற்றனர்.

இமாம் முஹம்மத்  ஸஊதிஅரேபியாவில் அன்றிருந்த நஜ்த் மாகாணத்தில் அமைந்துள்ள ரியாத் நகருக்கு வடக்கே சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள அல்-உயைனா எனும் சிற்றூரில் கி.பி. 1703ல் பிறந்தார். சிறு வயது முதலே சிறந்த விவேகியாகவும், நாவன்மை படைத்தவராகவும்

விளங்கியமையால் 10 வயதாகும்போதே அவரால் அல்குர்ஆனை மனனம் செய்ய முடிந்தது. இவரது தந்தைதான் இவரின் முதல் ஆசானாக விளங்கினார். தந்தை ஓர் ஆலிமாகவும் காழியாகவும் திகழ்ந்த அதே வேளை தந்தையின் தந்தை ஓர் ஆலிம், ஒரு பகீஹ், ஒரு முகப்தி என்று பல சிறப்பு அந்தஸ்துக்களைப் பெற்றிருந்தார். இவ்வாறு குடும்ப ரீதியாக இவருக்குக் கிடைத்த அறிவுச் சூழலும் பின்புலமுமே பிற்காலத்தில் சிறந்ததொரு மார்க்க அறிஞராகப் பிரகாசிக்கக் களமமைத்துக் கொடுத்தன. இருப்பினும் பிற்பட்ட காலத்தில் இவரது தந்தையே இவரது கொள்கைக்கு எதிரியாக விளங்கினார்.

சமயசூழல்

இவரது காலத்தில் உலமாக்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை. இஸ்லாம் தோன்றி வளர்ந்த அரேபியாவிலேயே இஸ்லாம் அந்நியமாகிப் (கரீப்) போயிருந்தது. பல சந்தர்ப்பங்களில் உலமாக்கள் கொலை செய்யப்பட்டனர். கல்வியறிவு அற்றிருந்த இச்சமூகத்தில் அரசியல் சீர்கேடுகள் எங்கும் தலைவிரித்தாடின. ஜாஹிலிய்யாக் காலம் மறு பரிணாமம் பெற்று விட்டதோ என்று எண்ணுமளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டிருந்தது. ஜாஹிலிய்யதுஷ்-ஷிர்க் எனப்படுகின்ற ஜாஹிலிய்யத் இக்காலத்தில் மிக மோசமான நிலைமையை அடைந்திருந்தது. அல்லாஹ் அல்லாதோரை வணங்குதல், கபுறு வணக்கம், ஒளலியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முதலாம் அம்சங்கள் மிகப் பரவலாகக் காணப்பட்டன. கற்களையும் மரங்களையும்கூடக் கண்ணியப்படுத்தும் நிலை மீண்டும் அரேபியாவில் உருவாகியது. இத்தகைய ஒரு சமூகப்பின்னணியில்தான் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் தோற்றம் இடம்பெறுகின்றது.

பணிகள்

தௌஹீதை நிலை நிறுத்துவதே அவரது மிக முக்கியமான பணியாக இருந்ததால், ஷிர்க்கிற்கு எதிரானதாகவே அவரது போராட்டம் அமைந்திருந்தது. இதனால்தான் இவரையும் இவரது கொள்கை சார்ந்தவர்களையும் பொதுவாக தௌஹீத் வாதிகள் என மக்கள் அழைக்கின்றனர். அன்று நிலவிய பித்அத்துக்கள் எனப்படும் நூதன அனுஷ்டானங்கள், குராபாத் எனப்படும் மூடநம்பிக்கைகள், கொள்கைகளுக்கெதிராகப் பரவலாகப் போராடிய ஒருவராகவும், அசலான அல்குர்ஆன், ஸ{ன்னாவின் வழியில் மக்கள் உருவாக்கப்படல் வேண்டு;ம் என்பதில் ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்டவராகவும் இவர் காணப்பட்டார்.

இவரது அமைப்பு பற்றி சமூக மட்டத்திலும் ஆய்வாரள்கள் மத்தியிலும் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுவதைக் காணமுடிகிறது. சிலர் தன்னை முழுக்க முழுக்க சன்மார்க்க இயக்கம் என்று பார்க்கின்றனர். வேறு சிலர் அரசியல் நோக்கத்துக்காக மார்க்கத்தைப் பயன்படுத்தும் இயக்கம் என இதனைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் ஏக காலத்தில் இதனை அரசியல் ரீதியானதும்  மார்க்க ரீதியானதுமான இயக்கமாகக் கருதுகின்றனர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம் சஊதி அரேபிய அரசு என்ற பெயரில் ஒரு தனியான அரசு உருவாவதற்கு இவரது பங்களிப்பே மிகப் பெரும் காரணமாக அமைந்தது. எனவே, உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் இருந்து சஊதி உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் என்ற வகையிலும் உஸ்மானியரின் வீழ்ச்சிக்கு இவர் துணை நின்றவர் என்ற வகையிலும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அரசியல் நோக்கங்களுக்காக மார்க்கத்தைப் பயன்படுத்தியவர் என்று பலராலும் குற்றம் சுமத்தப்படுகிறார். ஆனால், உண்மையில் இவரது இயக்கம் இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து மிகவும் தூய்மையானதாகும். 

என்றாலும் இவருடைய நடவடிக்கைளின் விளைவாக தவிர்க்க முடியாத சில வரலாற்றுக் காரணங்களினால் உண்மையில் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இவரது பணிகள் காரணங்களாக அமைந்தன என்பதை எந்த வகையிலும் மறுப்பதற்கில்லை. 

மறுபக்கத்தில் ஆலுஸ்-ஸ{ஊத் என்ற குடும்பத்தவர்கள் ஸஊதி எனும் பெயில் ஓர் அரசை நிறுவுவதற்கு இவருடைய பங்களிப்பு மிக மகத்தானதாக அமைந்தது. ஏனென்றால் ஆட்சியாளரின் துணையோடுதான் இவர் தனது இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார். ஆட்சிப் பொறுப்பை ஸ{ஊத் குடும்பமும், சன்மார்க்கப் பணியை முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் கவனித்துக் கொள்வதென ஓர் உடன்பாடும் கைச்சாத்தானது. இந்த வகையில் பார்க்கின்றபோது இவருக்கெதிராக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு அவ்வளவு பொருத்தமுடையது அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனால் அதே நேரம் ஒருபக்க விளைவாக இந்த விடயத்தில் சில பாதகமான விளைவுகள் ஏற்பட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

சாதனைகள்

. நவீன இஸ்லாமிய எழுச்சி மற்றும் நவீன இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். இவரது சிந்தனைகளால் கவரப்பட்ட முஹம்மத் இப்னு அலி அல்ஜீரியாவில் ஸனூஸிய்யா இயக்கத்தை உருவாக்கினார்.

. ஏகத்துவக் கொள்கையின் கீழ் அரேபியத் தீபகற்பம் முழுவதையும் கொண்டு வந்தார்.
. இஸ்லாமிய சமூகத்தில் கல்வி ரீதியான விழிப்புணர்வு தோன்றக் காரணமாக இருந்தார்.
. முஸ்லிம் உம்மத்தை இஸ்லாத்தின் மூல ஊற்றுக்களான அல்-குர்ஆன், ஸ{ன்னாவின் பக்கம் திருப்பினார்.
. இவர் அன்று நஜ்த் மாகாணத்தில் நிலவிய எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக செயல்பட்டு அவற்றை 
  ஒழிப்பதில் வெற்றி கண்டார். 
. நஜ்த் வாசிகள் தூய தௌஹீதின் பக்கம், குர்ஆன், ஸ{ன்னா பக்கம் திருப்ப இவரது பங்களிப்பு மிக  மகத்தானதாக அமைந்திருந்தது. 
. மார்க்க அறிவு வளர்வதற்கு இவர் காரணமாக இருந்தார். 
. இவரது முயற்சியினால் நிறைய உலமாக்கள் தோற்றம் பெற்றனர். 
. நிறைய இஸ்லாமிய நூல்களை எழுதினார். 
. நாட்டில் சட்டமும், ஒழுங்கும் பேணப்படும் நிலை உருவானது. 
. உலகில் நஜ்த் மாகாணம் இவரது முயற்சியினால் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்தது.
. உஸ்மானிய சாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டு சவூதி அரேபியா என்ற பெயரில் ஒரு தனி ஆட்சி உருவாவதற்கும் இவரது அழைப்புப் பணியே காரணமாக அமைந்தது.

உண்மையில் இவருடைய பிரசாரத்தை வஹாபியப் பிரசாரம் என்று மக்கள் குறிப்பிடுவர். அதனை நல்ல நோக்கோடு பயன்படுத்துபவர்கள் இருப்பது போலவே, தீய நோக்கில் பயன்படுத்துவோரும் உண்டு. எது எப்படி இருந்தபோதிலும் இவ்வியக்கத்தை வஹ்ஹாபிய இயக்கம் என்று சொல்வதைவிட தூய இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ஒரு தஃவா முயற்சி எனக் கூறுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும்.

இவருடைய இந்த முயற்சியின் விளைவை சவூதி அரேபியா மாத்திரமன்றிக் காலப்போக்கில் முழு உலகமுமே காணமுடிந்தது. இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரையில் 1940களின் ஆரம்பப் பகுதிகளில் குருநாகலைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் பக்ரி என்ற ஓர் ஆலிம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபினதும் அவரது மாணவர்களதும் கருத்துக்களால் கவரப்பட்டு, இலங்கையில் அக்காலத்தில் நிலவிய ஷிர்க், பித்அத், குராபாத் எனபவற்றுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராடினார். அவர் தோற்றுவித்த இயக்கமே இன்று ஜம்இய்யது அன்ஸார் ஸ{ன்னத் முஹம்மதிய்யா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.

பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட இஸலாமிய மறுமலர்ச்சிக்கு அப்துல் வஹ்ஹாபின் பஙகளிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அமைந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக 20ம் நூற்றாண்டில் தோன்றிய அனைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களிலும் இவரது சிந்தனையின் தாக்கம் படிந்திருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள்.

இவர் தனது தஃவாவைத் தனது 20வது ஆரம்பித்து சுமார் 70 வருடப் போராட்டத்தின் பின்னர் மிகப் பெரும் வெற்றியையும் கண்டார். கி.பி. 1792 ஜுன் மாதம் 22ம் திகதி வபாத்தானார்.

ஆளுமைப்பண்புகள்

வீரம், துணிச்சல், பொறுமை, பற்றற்ற வாழ்க்கை, ஈகை, வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு என்பன இவரிடம் காணப்பட்ட முக்கிய பண்புகளாகும். ஆட்சியாளர் இப்னு ஸ{ஊதோடு சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்குக் காரணமாக இருந்தாலும் மிக எளிமையாகவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார். இவர் மரணிக்கின்ற வேளையில் இவருக்கு நிறையக் கடன்கள் இருந்தன. இவருடைய வபாத்துக்குப் பிறகு இப்னு ஸ{ஊத் இவரது கடன்களை அடைத்தார். வாரிசுச் சொத்தாக இவர் எதனையும் விட்டுச் செல்லவில்லை. ஏராமான நூல்களை, அவை சிறிய ந}ல்களாக இருந்தாலும் எழுதிவிட்டுச் சென்ற பெருமை அவரையே சாரும்.

நவீன இஸ்லாமிய எழுச்சியின் தந்தை என வருணிக்கப்படும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அலி அத்தன்ந்தாவி, “பன்னிரண்டாம் நூற்றாண்டின் முஜத்தித்” எனக்  குறிப்பிடுவது நோக்கத்தக்கது

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.