Monday, 30 June 2014

இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியாது

நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். 

அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், "எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். 

ஆக தன்னுடைய உற்ற தோழர்களையே உவைஸ் அல்கர்னியிடம் பாவமன்னிப்பு தேடச் சொல்கிறார்கள் என்றால் இவரை நாம் நல்லடியார் என்று சந்தேகமே இல்லாமல் உறுதியாக இவர் சொர்க்கவாசி, நல்லடியார், மகான் என்று சொல்லலாம். 

அதேபோல மஹ்தீ என்பரைப் பற்றியும் நபிகளார் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். இவ்வுலகில் அவர் நல்லடியாராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை வைத்து இவர் நல்லவர் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம். 

அல்லாஹ் இவர்களைப் பற்றி நல்லடியார் என்று அறிவித்துக் கொடுத்ததனால் தான் இவர் நல்லடியார் என்பது நபிகளாருக்கு தெரியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று தவறாக விளங்கி விடக்கூடாது. 

ஆக, இதுவரை நாம் பார்த்தவர்களைத் தவிர வேறு யாரையும், (நாம் தேடிப்பார்த்த வரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொர்க்கவாசி என்றோ நற்சான்று அளித்ததே இல்லை. அபூஹனிபா, ஷாஃபி, அல்லது அப்துல் காதிர் ஜீலானி இவர்களைக் கூட நபிகளார் நல்லவர்கள் என்றோ மகான்கள் என்றோ சொன்னதே இல்லை. அவ்வாறு இருக்கும் போது இவர்களையெல்லாம் நல்லவர் மகான் என்று நாம் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் நல்லடியார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் உலகம் அழியும் வரைக்கும் இவர்களால் காட்டவே முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

நாம் இதுவரை பார்த்த அத்தனை செய்திகளும், எந்த ஒருவரையும் நாமாக நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொல்லக்கூடாது.நல்லடியார்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.

நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் சொல்கிறது. ஆனால் அவர்களைக் கொண்டாடுவதற்குச் சொல்லவில்லை. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை. 

அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறான். அவர்களுக்கு உரூஸ் எடுக்க வேண்டும், பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறையையும் சேர்த்தே சொல்லியிருப்பான். ஆனால் அவர்களைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவன் சொல்லவில்லை. 

நீங்கள் நல்லடியார்களாக இருந்தால் இந்த அந்தஸ்தை அடைந்து கொள்வீர்கள். நீங்கள் இறைநேசர்களாக இருந்தீர்களென்றால் இந்த பரிசுகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்மையும் இறைநேசர்களாக ஆக்குவதற்காக சொன்ன வாக்குறுதியே தவிர யாரையும் இறைநேசர் என்று முடிவு செய்து கொண்டாடுவதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து அல்லாஹ்வின் அறிவிப்பின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவிப்பின் படியும் நல்லடியார்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். 

ஆனால் அவர்களுக்குரிய எல்லை என்ன? நல்லடியாராக, அவ்லியாவாக ஆனவுடன் எல்லாவிதமான ஆற்றல்களும், சக்தியும் அவர்களுக்கு வந்துவிடுமா? அல்லது அல்லாஹ்விடம் நாம் கேட்பதை அவர்களிடமும் கேட்கலாமா? அல்லாஹ் செய்வதையெல்லாம் அவர் வந்து செய்து முடித்திடுவாரா? அல்லது அவர் மனிதத் தன்மையிலிருந்து அப்பாற்பட்டவராக ஆகிவிடுவாரா? என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் நல்ல அந்தஸ்து கிடைக்குமே தவிர இந்த உலகத்தில் அவர் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவராக ஆகமாட்டார். மனிதனுக்கு முடியாத விஷயங்களைச் செய்பவராக ஆகமாட்டார். எல்லா நிலையிலும் அவர் மனிதராகத் தான் இருந்திருப்பார். இருந்திருக்க முடியும். முதலில் அவ்லியாக்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

அவ்லியாக்கள் என்று கண்டுபிடித்தால் கூட அவ்லியாக்கள் அதைச் செய்திருக்கிறார்கள், இதைச் செய்திருக்கிறார்கள் என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்களே அந்தக் கதைகள் பொய் என்பதற்கு நிறைய சான்றுகள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் குர்ஆனுடைய போதனைகளிலிருந்தும் நமக்குத் தெரிய வருகின்றது.

அல்லாஹ்வுடைய நேசர்களில் நபிமார்கள் சிறந்தவர்கள். அதில் நம்மில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்லியாக்களெல்லாம் நபிமார்களுடைய அந்தஸ்துக்குக் கீழ் தான் வருவார்கள். நபிமார்கள் ஒவ்வொரு காலத்திலேயும் அந்தந்த மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, இன்றைக்கு நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து வைத்துள்ள மாதிரி அன்றைக்கு நபிகளாரை அம்மக்கள் நினைத்திருந்தால், அந்த நபிமார்கள் அடி வாங்கியிருப்பார்களா? கேலி, கிண்டல் செய்யயப்பட்டிருப்பார்களா? நாட்டை விட்டு துரத்தப்பட்டிருப்பார்களா? என்பதை சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

ஆனால் நாம் இன்றைக்கு அவ்லியாக்கள் என்றால், அவர் கடவுள் மாதிரியும் நாம் அவர் முன்னால் பணிந்து நிற்க வேண்டும் எனவும், அவர் நடந்து வந்தால் எல்லோரும் அவருக்கு எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் எண்ணி வைத்திருக்கிறார்கள். எந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவனாக ஆக முடியாது. உதாரணத்திற்கு, எனக்குக் கடவுள் தன்மை இருக்கிறது, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று ஒருவன் சொல்லி, வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறேன், இரும்பைத் தங்கமாக மாற்றுகிறேன் என்றால் யாராவது அவன் மேல் கை வைப்பார்களா? அவனை அடிப்பார்களா? அவனைத் திட்டுவார்களா? எதுவும் செய்யமாட்டார்கள். இந்த மாதிரி நபிமார்களைப் பற்றிய பயம் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்குமானால் யாராவது அவர்களை விரட்டியிருப்பார்களா? கொலை செய்திருப்பார்களா? ஆக நபிமார்கள் என்ற மிகச் சிறந்த நல்லடியார்கள் வாழ்ந்த போது அச்சமுதாய மக்களால் கிள்ளுக் கீரையாகக் கருதப்பட்டார்கள்; எள்ளி நகையாடப்பட்டார்கள்; கேலி கிண்டல் செய்யப்பட்டார்கள். பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். கிறுக்கன் என்று சொன்னார்கள். பலவிதமான துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கினார்கள். இந்தச் சோதனைகளின் போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? நம்மைப் போல சாதாரண மனிதராகத் தான் இருந்தார்கள். மந்திரவாதியாக இருக்கவில்லை. ஜோசியக்காரனாகவும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் மந்திரம் தந்திரம் தெரிந்தவராக இருந்திருந்தால் யாரும் அவர்களை நெருங்கியிருக்க மாட்டார்கள். 

அதிலும் குறிப்பாக கல்லுக்குக் கூட சக்தி இருக்கின்றது என்று நினைக்கக்கூடியவர்கள், அந்தக் கல்லைத் திட்டினால் அது நம்மை குற்றம் பிடித்துவிடும் என்று நினைத்தவர்கள், நபிமார்களுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்தால் அவர்களிடம் நெருங்கியிருப்பார்களா? 

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைத்து சமுதாய மக்களுமே கல்லுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்துத் தான் அதனை வழிபட்டார்கள். ஆனால் அந்த சக்தி மூஸா நபிக்கு, ஈஸா நபிக்கு, இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது என்று நினைத்திருந்தால் அனைவரும் அந்தந்த நபிமார்களிடம் கையைக் கட்டிக் கொண்டு சரணடைந்திருப்பார்கள். அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அந்த மாதிரி யாரும் இருந்ததாக வரலாறு இல்லை. நபிமார்கள் வாழ்ந்த ஒவ்வொரு சமுதாயத்திலும் எந்த மாதிரி மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைப் பற்றி இறைவன் கூறுகிறான். அதாவது மூஸா, மற்றும் ஹாரூண் நபி இருவரும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது பத்து அற்புதங்களை அல்லாஹ் கொடுத்து அனுப்புகிறான். மற்ற நேரத்தில் சாதாரண மனிதராகத் தான் இருப்பார்கள். கைத்தடியை போட்டால் பாம்பாக மாறுவது, சட்டைப்பைக்குள் கையை நுழைத்து வெளியே எடுத்தால் வெண்மையாக, பிரகாசமாக இருப்பது உட்பட 10 அத்தாட்சிகளை அவர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அந்த 10 அற்புதங்களையும் ஃபிர்அவ்னிடமும் அந்த சமுதாய மக்களிடமும் காட்டியபோது, அதைக் கண்ணால் பார்த்துக் கொண்டே... 
"இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர். அல்குர்ஆன். 23:47 

மேலும் அவ்விருவரைப் பற்றியும் அந்த மக்கள், "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!'' என்று அவர்கள் கேட்டனர். அல்குர்ஆன். 14:10 

அதேபோன்று நூஹ் நபியைப் பார்த்து, "எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர். அல்குர்ஆன் 11:27 

மேலும், 23:24-33, 7:131 ஆகிய வசனங்களிலும் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஆக அத்தனை நபிமார்களும் அம்மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் சொல்லக்கூடிய செய்தி சரியா? தவறா? என்பதை பார்க்காமால், இவர் யார்? இவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தான் பார்த்தார்கள். 

நாம் அடித்தால் அவர் கீழே விழுந்து விடுகிறார். நாம் கவலைப்படுவதைப் போன்று அவரும் கவலைப்படுகிறார். நம்மைப் போன்று அவரும் முதுமையை அடைகின்றார். இவரை நாம் எவ்வாறு தூதராக ஏற்றுக் கொள்வது என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இருவரும் 10 அற்புதங்களைக் காட்டியும் கூட அவர்களுடைய கண்களுக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தென்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மந்திரவாதியாகத் தென்பட்டு இருப்பார்களேயானால் அந்த மக்கள் அனைவரும் அவ்விருவரிடம் சரணாகதி அடைந்திருப்பார்கள்.

அதேபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்புப் பணி செய்யும் போது அவர்களுடைய ஒழுக்கம், பண்பாடு, நேர்மை, வாய்மை இதை வைத்து அவர்களை மறுக்கவில்லை. இதை அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். மக்களிடத்தில் நபியவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதனால் தான் அவர்களை அம்மக்கள் சாதிக் (உண்மையாளர்), அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்றும் அழைத்து வந்தனர். இவ்வாறு இருக்க அந்த மக்கள் எதை வைத்து நபி (ஸல்) அவர்களை மறுத்தார்கள்? இவர் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்கிறார். ஆனால் நம்மைப் போலத்தானே இருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லையே! என்று கூறியே மறுத்தார்கள். 

இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான். "இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர். அல்குர்ஆன் 25:7 

ஆக, நபிமார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம், நாம் யாரை அவ்லியாக்கள் என்று நினைத்து, அவர்களுக்கு ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறோமோ அவர்களைப் போன்று அந்த நபிமார்கள் இல்லை என்பது தான். 

அதேபோன்று ஸாலிஹ் நபியவர்களும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய அம்மக்களின் எண்ணம் எவ்வாறு இருந்தது என்பதை இறைவன் சொல்கிறான். "நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்) அல்குர்ஆன் 26:154 

இந்த வசனத்தில் அந்த மக்கள் சாலிஹ் நபியிடத்தில் நீயும் எங்களைப் போல் ஒரு மனிதர் தானே! எங்களைப் போன்று சாப்பிடுகிறாய்; தூங்குகிறாய்; மலம், ஜலம் கழிக்கின்றாய். இவ்வாறு இருக்கும்போது எதை வைத்துக் கொண்டு நீ நபியென வாதிடுகிறாய் என கேட்டார்கள். மேலும் அம்மக்கள் சாலிஹ் நபியைப் பார்த்து, "நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும் சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்'' அல்குர்ஆன் 54:24 

என்றும் கூறியதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அதே போன்று ஷூஐப் நபியிடத்தில் அந்தச் சமுதாய மக்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான். "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம். அல்குர்ஆன் 26:186 

அதே போல யாசீன் என்கிற சூராவில், ஒரே சமுதாயத்திற்குப் பல தூதர்களை அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கிறான். முதலில் ஒரு தூதரை அனுப்புகிறான். அவரை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவதாக ஒரு தூதரை அனுப்புகிறான். அவரையும் நம்ப மறுக்கிறார்கள். அவ்விருவருடன் மூன்றாவது நபரைக் கொண்டு பலப்படுத்துகிறான். இவ்வாறு மூன்று தூதர்களும் சேர்ந்து வருகிறார்கள். அந்த மூவரையும் பார்த்து, "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று கூறினர். அல்குர்ஆன் 36:15 

நீங்கள் மூன்று பேர் வந்தாலும் சரி, முப்பது பேர் வந்தாலும் சரி நீங்கள் எங்களைப் போல மனிதர்கள் தான், உங்களிடம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுமே இல்லையே! நாங்கள் செய்வதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் இறைத்தூதர்களாக ஆக முடியும். 

எங்களுடைய கண்களுக்கு நீங்கள் மந்திரவாதிகளாகவோ, தந்திரவாதிகளாகவோ தென்பட்டதே இல்லையே! பிறகு எப்படி நாங்கள் உங்களை இறைத்தூதர்கள் என நம்புவது? என்று கேட்டனர். அதேபோல பிரச்சாரம் செய்ய வந்த அத்தனை நபிமார்களையும் பைத்தியக்காரன், கிறுக்கன் என்றுறெல்லாம் அம்மக்கள் எள்ளி நகையாடினார்கள். நீயும் எங்களைப் போல ஒரு மனிதன் தான் என்பது கூட அந்த நபிமார்களுக்குக் கவலையை ஏற்படுத்தவில்லை. இது பரவாயில்லை. நாகரீகமான வார்த்தை என்று சொல்லலாம்.

ஆனால் அதையும் மீறி பைத்தியக்காரன், கிறுக்கன் போன்ற அநாகரீகமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்திற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் என்று நபிமார்கள் சொல்லும்போது, அந்த நபிமார்களைப் பார்த்து, "இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது' என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான். "அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்குர்ஆன் 15:6 

மேலும் 23:25, 26:27, 37:36, 44:14, 51:52, 54:9 ஆகிய வசனங்களில் நபிகளார் உட்பட எல்லா நபிமார்களையும் எவ்வாறு கேலி கிண்டலாகப் பேசினர் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ஆக, அம்மக்கள் நபிமார்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் தைரியமாக இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு நபிமார்கள் சாதாரண மனிதர்களாக அவர்களுக்குக் காட்சியளித்தனர். அவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவோ, தங்களால் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட முடியும் என்றோ, எங்களைத் திட்டினால் அழிந்துவிடுவீர்கள் என்றோ, எங்களைத் தொட்டாலே நாசமாகி விடுவீர்கள் என்றோ அவர்கள் கூறவில்லை. எல்லோரையும் போல் சாதாரணமான மனிதராக இருந்ததால் தான் அவர்களை அம்மக்கள் திட்ட முடிந்தது; அடிக்க முடிந்தது; கேலி செய்ய முடிந்தது. இன்று, இறந்து போன ஒரு மனிதரைக் கூட திட்டுவதற்கு மனிதன் பயப்படுவதைப் பார்க்கிறோம். 10 வருடமாக தர்காவிற்குச் சென்று நேர்ச்சை செய்தும் குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் அந்த அவ்லியாவைத் திட்டுவதில்லை. திட்டினால் அவரால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறான். 

இப்படித் தான் மனிதனுடைய சுபாவம் இருக்கிறது. இந்த மாதிரியான செயல்களை நபிமார்கள் தங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் கிறுக்கன் என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பைத்தியக்காரன் என்று சொல்ல முடியுமா? நீயும் எங்களைப் போல மனிதர் தான் என்று சொல்ல முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது. இதிலிருந்து என்ன விளங்குகிறது? இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பது போல் எந்த நபியும் இருந்தது கிடையாது. 

நபிமார்களுக்கே கிடையாது என்றால் மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு அதுபோன்ற சக்திகள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நபிமார்களைப் பற்றி மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் எப்படியெல்லாம் மனிதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சக்தி (ஆற்றல்) எந்த அளவுக்கு இருந்தது? அவர்களால் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியுமா? இது போன்ற விஷயங்களையெல்லாம் நாம் அலசிப் பார்த்தோமென்றால் இறைநேசரை நாம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து மொத்தமாக அடிபட்டுப் போய்விடும். இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதிலேயே எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றது. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த இறைநேசருக்காவது நாம் நினைத்த மாதிரி சக்தி இருக்குமா? கிடையவே கிடையாது என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகிறார்கள்.சிந்திப்பார்களா அவ்லியா வெறியர்கள்?

யார் சுன்னத் ஜமாஅத்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை.

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்.

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
·                     அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
·                     அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத்
சுன்னத் ஜமாஅத்
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது.
சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது
அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது
இணைவைப்பு வழிபாடு கிடையாது
சமாதி வழிபாடு முக்கியத்துவம்
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது!
மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது
பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்தீட்சை என்று நம்பி மோசம் போவது!
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது
ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது!
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது
இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது!
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது!
இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது



சுன்னத்ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?

·                     தர்காஹ் போவது சுன்னத்தா?
·                     அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
·                     கப்ரு வணங்கம் சுன்னத்தா?
·                     மவ்லூது சுன்னத்தா?
·                     மீலாது சுன்னத்தா?
·                     ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா?
·                     தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
·                     முரீது சுன்னத்தா?
·                     ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
·                     கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
·                     10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
·                     1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
·                     ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
·                     வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
·                     வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
·                     நாகூர் மொட்டை சுன்னத்தா?
·                     தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
·                     மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா?
·                     சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
·                     விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
·                     உருஸ், படையல் சுன்னத்தா?
·                     சந்தனகூடு சுன்னத்தா?
·                     கொடிமரம் சுன்னத்தா?
·                     அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா?
·                     கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
·                     தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
·                     கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா?
·                     யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
·                     ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
·                     கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா?
·                     மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
·                     சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ் ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை  அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!
அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா?

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.
நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

பெயர் மாற்ற கோரிக்கை
நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!


அல்லாஹ்வின் இல்லமாம் கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா?

கபுறு வணங்கிகளே ....!!! கபுருகளை முத்தமிடாதீர்.. என்று நாம் கூறும்போது.... சில பைத்தியங்கள் 

// அல்லாஹ்வின் இல்லமாம் கபாவை முத்தமிட்டவர் சுவர் வணங்கியா ?
ஹஜருல் அஸ்வத் புனித கல்லை முத்தமிட்டவர் கல்லு வணங்கியா ? // என்று கேட்கின்றனர் 

கஃபாவின் உள்ள ஹஜருல் அஸ்வத்' கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.

துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.

அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.

நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; அல்லது விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, கபுறுகளையோ . கொடிமரங்கலையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி 'நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்'என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

மேற்படி கூற்றைக் கவனித்துப் பார்த்தால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிட்டதற்காகவே முத்தமிடுகிரோம் தவிர அக்கல்லுக்கு ஏதாவது சக்தி உண்டு என்று நம்பினால் அதுவே ஷிர்க்கின் முதற்படியாகும்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், 
மக்கா காபிர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்ற எண்ணத்தில் தமது மூதாதையர்களான இப்ராஹீம் இஸ்மாயீல் ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?